தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. குறித்த சபை அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
திலீபனின் நினைவேந்தல் தொடர்பான விடயங்களில் எமது தேசிய மக்கள் சக்தி கட்சி எந்தவித எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கவில்லை. அதனால் தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் எமது உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டபோதும் எமது கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
ஒரு சிலையை நிரந்தரமாக அமைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்க வேண்டுமெனில், உரிய கால அவகாசத்துடன் பிரேரணையைச் சமர்ப்பித்து, அது நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று, தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே சபையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனாலும் சிலை அமைப்பது தொடர்பான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அது தற்காலிகமாக அமைக்கப்படுவது என்றே கலந்துரையாடப்பட்டு, அதுவே தீர்மானமாகவும் எடுக்கப்பட்டிருந்தது.
எமது கட்சியுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படாத போதிலும், இந்த விடயத்தில் தாம் மரியாதையுடன் அமைதியாக இருந்தோம்.
ஆனால், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக எமது அரசாங்கத்தின் மீது பழிசுமத்தும் வகையில் அமைந்தமை எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்களும் உணர்வுள்ள மனிதர்கள்தான். தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் நோக்கிலேயே நாங்கள் ஆதரவளித்தோம். எங்களிடம் எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை. அவ்வாறிருக்கையில், இன்று எங்களுடன் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது
அதேவேளை, திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, ஏதேனும் சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாகக் கருதப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளை நாடுவதே பொருத்தமானது.
இந்த விடயம் தியாகத்தின் நினைவைப் போற்றும் விடயம் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டியாக மாறக்கூடாது.
நினைவேந்தல் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களை ஊடகப் பிரசாரம் அல்லது அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்
தியாகத்தின் நினைவை ஒவ்வொரு முறையும் அரசியல் விவாதத்திற்குள் கொண்டு வந்து சிக்கலாக்குவது வேதனையளிக்கிறது. இந்த விடயம் தொடர்பில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
What’s your Reaction?

