பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது.
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் பிரதான நினைவுத் தூபியில், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை வெளிப்படுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பூ.லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்


