யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலில் நெடுந்தீவை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பிலான வழக்கு விசாரணைகளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது .
குறித்த வழக்கு விசாரணையில் நேற்றைய தினம் புதன்கிழமை சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றுக்கு வந்தவர்கள் , நீதிமன்றில் சாட்சியம் அளித்த பின்னர் , நெடுந்தீவு நோக்கி பயணிப்பதற்காக சென்று கொண்டிருந்தவர்களை மோட்டார் சைக்கிள் தமது முகம்களை மூடி கட்டியவாறு வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்
தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் ஒருவர் நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவர் என தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அடையாளம் கண்டு பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
அதன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தாக்குதலாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்
சாட்சியங்களை அச்சுறுத்துவது , சாட்சியங்கள் மீது தாக்குதலைகளை மேற்கொள்வது பாரதூரமான குற்றமாக காணப்படும் நிலையில் , நீதிமன்றில் சாட்சியம் அளித்து விட்டு சென்ற நபர் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரியுள்ளனர்
What’s your Reaction?

