இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நேற்று (09.10.2026) விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சின் வளாகத்தை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு இலங்கை இராணுவத்தின் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நெருக்கமான உறவுகள் மற்றும் இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தினார்.
குறிப்பாக சவாலான மற்றும் அவசர காலங்களில் இலங்கைக்காக இந்தியா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்கும் உதவிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் கௌரவமான நன்றியையும் அவர் இங்கு வெளிப்படுத்தினார்.
இலங்கை வழங்கிய சிநேகபூர்வமான வரவேற்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் பிரிக்க முடியாத உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரும் மேலதிக செயலாளருமான (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) இந்திகா விஜேகுணவர்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முப்படைகளின் தளபதிகள் உட்பட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய தூதுக்குழுவின் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?

