ஒரு சமூகத்தின் எதிர்காலச் சந்ததியை உருவாக்காமல் தடுக்கும் நோக்குடன்
அரங்கேற்றப்பட்ட குற்றங்களா செம்மணி புதைகுழி? என
இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக இயற்கையின் நண்பர்கள் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்;
அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரதிர்ச்சி தரும் உண்மைகள் தற்போது சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன.
இப்பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்பட்டதை அடுத்து, சட்டத்தரணிகளின் முறையீட்டை ஏற்று நீதிமன்றம் மற்றும் சட்டமருத்துவ அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் குறித்த இடம் ஒரு ‘மனிதப் புதைகுழியாக’ அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச புதைகுழி அகழ்வு தரநிலைகளுக்கு முழுமையாக உட்படுத்தப்படவில்லை எனினும், நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட அகழ்வுப் பணிகளில் சுமார் 550க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 520க்கும் மேற்பட்ட உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடும்போது, அதிகளவான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிப் பரப்புகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
இம்மனிதப் புதைகுழியில் வெளிப்பட்ட சான்றுகள் மிகவும் கோரமானவை குறிப்பாக அதிகளவான சிறுவர்கள் மற்றும் பெண்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் தலைகள் இல்லாமலும், ஆடைகள் இன்றிக் காணப்பட்டமையும் மீட்கப்பட்டவையும் அடையாள அழிப்பின் நோக்கில் தான் செய்யப்பட்டு இருக்கின்றன.
இது ஒரு சமூகத்தின் எதிர்காலச் சந்ததியை உருவாக்காமல் தடுப்பதும், மக்களின் இருப்பை முற்றிலுமாகச் சிதைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சர்வதேச குற்றங்களான திட்டமிடப்பட்ட இனவழிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகும். மனிதாபிமானமற்ற இக்கொடூரங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகவும் பொறுப்புக்கூற வேண்டியவராகவும் உள்ள அரசே, தன் மீதான குற்றங்களை விசாரிப்பது நீதி நெறிமுறைக்கு முற்றிலும் முரணானதாகும்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதுமே ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளன.
மரபணுத் தரவுகள் உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களாலோ நிர்வாக மாற்றங்களாலோ அழிக்கப்பட வாய்ப்புள்ளதால், மரபணுப் பாதுகாப்பிற்கு உலகளாவிய தரத்துடன் கூடிய சர்வதேசப் பொறிமுறை அவசியமாகிறது. அத்துடன் இந்த எலும்புகளின் காலத்தை அறிந்துகொள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியான கண்காணிப்பில் அமெரிக்கா போன்ற புகழ்பெற்ற சர்வதேச ஆய்வகங்களின் ஊடாக கதிரியக்கக் கார்பன் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
செம்மணி உள்ளிட்ட வடகிழக்கில் மீட்கப்பட்ட அடையாளம் காண முடியாத என்புக்கூடுகளுக்கும், படுகொலைசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்களுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கோரி, எவரும் தப்பியோட முடியாத சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி 14.08.2026 தொடக்கம் நான்கு நாட்கள் செம்மணி அணையாவிளக்கு திடலில் நடைபெறுகின்ற ‘நீதியின் ஓலம் – 2’ கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
உண்மையை வெளிக்கொணரவும், சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் நடக்கும் இப்போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அணிதிரண்டு குரல்கொடுக்க வேண்டுமென இத்தால் கேட்டுக்கொள்கிறோம்.என மேலும் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
What’s your Reaction?

