சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருட ஆரம்பத்தில் 10நிமிடங்களில் கிடைத்த பல் மருத்துவசேவை தற்போது 20தினங்கள் தள்ளிப்போவது ஏன்?
அன்று காலை(22/07/2026) 10 மணி இருக்கும். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவு வழமைக்கு மாறாக அமைதியாகக் காட்சிளித்தது.
பொதுவாக, அங்கு சென்றால் குறைந்தது 25-30 பேராவது வரிசையில் காத்திருப்பார்கள்.
ஆனால், அன்று அங்கு இருந்தது வெறுமனே 5 அல்லது 6 பேர் மட்டுமே! அவர்களிலும் சிலர் சிறுவர்களாக இருந்தமையால் அவர்களை அழைத்து வந்த பெற்றோருமாகவே இருந்தனர்.
வரிசையே இல்லாத அந்தச் சூழலைப் பார்த்தபோது, ‘அப்பாடா! இன்று வந்த உடனே வேலை முடிந்துவிடும், சட்டென்று பல்லையும் அடைத்துவிட்டு வீடு திரும்பிவிடலாம்’ என்றொரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
உள்ளே
மூன்று பல் மருத்துவர்கள் தங்கள் கடமையில் இருந்தார்கள்.
இரண்டு சுகாதார உதவியாளர்களும் அங்கே பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
மருத்துவர்களும் இருக்கிறார்கள், நோயாளிகளின் கூட்டமும் இல்லை! இதனால் உடனடியாக அலுவல் முடிந்துவிடும் என்ற போது தான் பல்லை பரிசோதித்த வைத்தியர் 12/08/2026 – 2.00 pm.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகான ஒரு முன்பதிவு (Appointment) தேதியை எழுதித் தந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே பற் சிகிச்சை நிலையத்துக்கு வந்த நினைவு நினைவுக்கு வந்தது. அன்று 30 பேருக்கு மேல் வரிசையில் காத்துக் கிடந்தார்கள். அப்படியிருந்தும், உள்ளே நுழைந்த 10 நிமிடங்களிலேயே பல் அடைக்கப்பட்டு, கைமேல் பலனுடன் வீடு திரும்ப முடிந்ததே!
ஆனால் இன்று?
கூட்டமே இல்லை…
மூன்று மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்…
தேவையான உதவியாளர்களும் இருக்கிறார்கள்…
அப்படி இருந்தும், வெறும் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சாதாரண பல் அடைக்கும் சிகிச்சைக்கு, 20 நாட்கள் கழித்து வாருங்கள் என்று அனுப்ப வேண்டியதன் அவசியம் என்ன?
பல் பிடுங்குதல் மற்றும் அடைத்தல் ஆகிய மருத்துவ தேவைகளின் அவசரத்தை அனைவருமே அறிந்திருப்பார்கள். இவ்வாறான நோய் நிலைமையில் 2தினங்கள் என்பதே மிக அதிகம்.இந்நிலையில் 20தினங்கள் உணவை சிரமத்துடன் மென்று விழுங்குவதென்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது சாதாரண ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியும்.

What’s your Reaction?

