இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டலுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம், சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை ஆகியன இணைந்து நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வும், ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவுருவப் படம் தாங்கிய ஆன்மீக எழுச்சி ஊர்வலம் கரடியனாறு நரசிங்கவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, ஊரைச் சுற்றி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சைவவினாவிடை போட்டி நடாத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
கரடியனாறு சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர் சிவமங்கை க.சாளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
கரடியனாறு சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அரவிந்தன் சர்மா, கரடியனாறு சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் க.சுரேஸ், சைவப்புலவர் திருமதி இ.விஜயலட்சுமி, மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத் தலைவி திருமதி காயத்திரி மற்றும் சிவதொண்டர் திருக்கூட்டத்தின் தலைவர் சிவதொண்டர் கே. கமல்ராஜ்,
செங்கலடி பிரதேச கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார், அதிபர் எஸ்.செந்தில்நாதன் ,சமயப் பற்றாளர் எஸ்.கந்தசாமி, சிவதொண்டர் திருக்கூட்டத்தின் இணைப்பாளர்கள், ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமமக்கள், சிவதொண்டர் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு நிருபர்


