பொருத்தமான உணவுப்பாதுகாப்பு முறைகளைப் பேணாமையினால்
ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பூநகரிப் பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
பூநகரி நான்காம் கட்டைப் பகுதியில் பொதுமக்களுக்கு உணவுப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பொருத்தமான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை வீடுகளிலும், உணவுகையாளும் நிறுவனங்களிலும் நாம் கடைப்பிடிக்காமையினால் நுண்ணங்கிகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் மூலம் நோய்த்தாக்கங்களும் அதனூடான மரணங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் அதிகளவாக நிகழ்கின்றன.
ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் உணவுச்சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளன. வீடுகளிலும், உணவு உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனங்களிலும் உணவுச்சுகாதார நடவடிக்கைகளை முழுமையாக அமுல்ப்படுத்த நாம் முன்வருவதில்லை. இதனால் பக்றீரியா வைரஸ் ஒட்டுண்ணிகள் மட்டுமன்றி உணவில் சேர்க்கும் சேர்மானங்களூடாகவும், பயன்படுத்தும் உபகரணங்களூடாகவும் நச்சு இரசாயனங்கள் உணவுடன் கலக்கின்றன. இவை குறுகிய மற்றும் நீண்ட காலத்தில் நோய்களையும்- உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
சாப்பிட மற்றும் சமைக்க முன்பும், மலசலகூடங்களைப் பாவித்த பின்பும் சவர்க்காரமிட்டு ஓடும்நீரில் முறையாக கைகழுவுதல், உணவுகையாளும் மேற்பரப்புகளை எப்போதும் கழுவிச் சுத்தமாகப் பேணுதல், உணவை பொருத்தமான வெப்பநிலையில் முழுமையாகச் சமைத்தல், சமைத்த, சமைக்காத உணவுகளை ஒன்றாகப் பேணுவதைத் தவிர்த்தல், இலகுவில் பழுதடையக்கூடிய உணவுகளை சேமிக்க வேண்டுமாயின் சமைத்தவுடன் விரைவாக குளிரூட்டியில் வைத்தல், நிறத்தீந்தைகள், தடைசெய்யப்பட்ட உணவு நிறமூட்டிகள் உணவுடன் சேருவதை தவிர்த்தல், பொலுத்தீன் பிளாஸ்டிக்குடன் சூடான உணவு பானங்கள் தொடுகையுறுவதைத் தவிர்த்தல், கழிவறைச் சுகாதாரததை பேணுதல், ஈ, கரப்பான், எலி,எறும்புகள் போன்ற காவி விலங்குகள் உணவுடன் தொடுகையுறுவதைத் தடுத்தல், சமையல் அறைகளில் மூடியுடைய குப்பைக் கூடைகளைப் பயன்படுத்துதல், உணவுத்தயாரிப்புக்கு எப்போதும் சுத்தமான நீரையே பயன்படுத்துதல் போன்றவற்றை கிரமமாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
பாதுகாப்பான உணவை உண்பதன் மூலமே நோய் எதிர்பு சக்தியுடைய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே எமது அன்றாடவாழ்வில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டு உயிர்களைக் காப்போம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

