தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தெரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் (Faculty of Islamic Studies and Arabic Language) புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் அவர்கள் மூன்று (03) ஆண்டுகள் காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2026 ஜூன் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இன்று நடைபெற்ற பீட சபையின் விசேட கூட்டத்தில் இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவத்தையும் சிறப்பான பங்களிப்புகளையும் கொண்ட கல்வியாளரான கலாநிதி ஜெஸீல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர் (Grade I) ஆகப் பணியாற்றி வருகிறார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த கலாநிதி ஜெஸீல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகத்துறையில் கலைமாணி (B.A. Hons.) பட்டத்தையும் பின்னர் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழகமான Universiti Kebangsaan Malaysia (UKM) இல் இஸ்லாமிய தலைமைத்துவம் (Islamic Leadership) தொடர்பான ஆய்வின் மூலம் கலாநிதிப் (PhD) பட்டத்தை 2010 ஆம் ஆண்டு பெற்றார். மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி கற்பித்தல் தொடர்பான சான்றிதழையும் (CTHE) பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள அவர், இஸ்லாமியக் கற்கைகள் துறையின் தலைவராகவும், பதில் துறைத் தலைவராகவும், ஆராய்ச்சி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும், பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் (Staff Development Centre) பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோன்று உயர்கல்வி அமைச்சின் “Higher Education for the Twenty First Century” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட IDAS திட்டத்தின் மானிய ஒருங்கிணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கல்வித் தர மேம்பாடு, பாடத்திட்ட அபிவிருத்தி, ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ள கலாநிதி ஜெஸீல், பல்கலைக்கழகத்தின் உள்தர உறுதிப்படுத்தல் (Internal Quality Assurance) மற்றும் பாடத்திட்ட அபிவிருத்திக் குழுக்கள் உள்ளிட்ட பல முக்கிய குழுக்களிலும் உறுப்பினராகவும் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக செயலாளராக மற்றும் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆராய்ச்சித் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வரும் அவர், இஸ்லாமிய சிந்தனை, நாகரிகம், தலைமைத்துவம், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள், தேசிய அபிவிருத்தியில் இஸ்லாத்தின் பங்களிப்பு போன்ற துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் அறிவியல் வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்ததோடு, பல ஆய்விதழ்களுக்கும் சர்வதேச கருத்தரங்குகளுக்கும் மதிப்பாய்வாளராகவும் (Reviewer) செயற்பட்டு வருகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆய்வு அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி ஜெஸீல், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்கு வழிகாட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளில் அவருடைய அர்ப்பணிப்பான பங்களிப்புகள் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவரது நீண்டகால கல்விசார் சேவைக்கும் நிர்வாகத் திறனுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் அவர்களின் தலைமையில், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பு துறைகளில் மேலும் பல முன்னேற்றங்களை அடையும் என பல்கலைக்கழக சமூகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

