உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழர் தங்கள் விடிவுக்காக ஆயுதம் ஏந்தியதும் அநுர குமர தரப்பினரின் ஆயுத கலாசார பின்னணியும் ஒன்றா..?

ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்கவின் ஆயுத கலாசார பின்னணியும், தமிழ் மக்கள் தங்கள் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியதும் ஒன்றா? ஓர் இனம் தனது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடியதை, இன்னோர் இனம் நாட்டின் ஆட்சியைக் கவிழ்த்து அதனைக் கைப்பற்ற முனைந்ததையும் எவ்வாறு ஒன்றாக்க முடியும்?

இப்பொழுது எதற்கெடுத்தாலும் செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம் என்பவையே பேசுபொருளாகி நிற்கின்றன. இதன் வழியாக காலநிலை மாற்ற அகதிகள் என்ற புதிய வர்க்கம் உருவாகி வருவதாக ஐரோப்பிய வட்டகை தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விரிவாக்கம் பற்றியதான குழாமொன்று காலநிலை மாற்ற அரசியல்வாதிகள் பற்றியும், இவர்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி வருவதையும் சுட்டியுள்ளது. இவை ஒன்றுக்கொன்று உடன்பாடுள்ளவையாகக் காணப்படினும், இவைகளால் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறானவையாக பிரிந்து தென்படுகின்றன.

மனிதனின் நுகர்வுப் பொருட்களில் முதலிடம் வகிக்கும் அரசியிலிருந்து அனைத்துமே இன்று அரசியலாக மாறிவருகிறது. காலநிலை மாற்ற அரசியல்வாதிகளின் தலையெடுப்பு இலங்கை போன்ற சிறுநாடுகளிலிருந்து அமெரிக்கா போன்ற வல்லரசுகள் வரை பல நெருக்கடிகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏழரை தசாப்தத்தை தாண்டிய தமிழ்த் தேசியத்துக்கான போராட்டம் இன்று எங்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்ந்துணர்ந்து பார்க்கும் ஓர் அரசியல் மாணவன் மட்டும் இதனை அறிந்துகொள்ள முடியுமென்றில்லை. அனைவருக்குமே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசியத்துக்கான வழித்தடம் பற்றிப் பேசுங்கால் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதில் தவிர்க்க முடியாத ஒன்று. இலங்கைத் தமிழருக்கான முதலாவது அரசியல் கட்சியாக பதிவு பெற்றது ஜி.ஜி.பொன்னம்பலம் என்னும் சட்டமேதை தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். அதிலிருந்து வெளியேறிய சிலரால் உருவாக்கப்பட்டதே இலங்கை தமிழரசு கட்சி.

தென்னிலங்கையில் முதலில் உருவான ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சராகவிருந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. சில காலத்தின் பின்னர் இதிலிருந்து வெளியேறிய இவர் சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கியதை, தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கியதற்கு சமாந்தரமாகப் பார்க்கலாம். காலத்தின் கோலமோ என்னவோ இந்த நான்கு கட்சிகளும் இன்று தங்கள் சொந்த மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க முடியாது வெறும் அரசியல் செய்பவர்களாக மாறியுள்ள நிலைமையை காணமுடிகிறது.

சட்டவாளரான தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இதுபற்றி மேலோட்டமாக தமது கட்டுரை ஒன்றில் சுட்டியிருந்தார். சிங்கள தேசம் எங்களுக்கான புதிய அரசியல் தலைமை ஒன்றை இரண்டாண்டுகளுக்கு முன்னர் அங்கீகரித்து ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுத்தது. ஆனால், தமிழ்த் தேசிய உணர்வு மக்கள் தங்களுக்கான அரசியல் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதிருப்பது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

விரும்பியோ விரும்பாமலோ தமிழரசுக் கட்சியே இன்று தமிழரின் தலைமை அரசியல் சக்தியாக விளங்குகிறது. ஆயுதப்போராட்டம் உச்சம் பெற்றிருந்த வேளையில் அதற்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழரசுக் கட்சியையும் அதன் வீடு சின்னத்தையும் தேர்தல்கள் ஊடாக தமிழ் மக்கள் அங்கீகரிக்க வேண்டிய நிலைமையை உருவாக்கிக் கொடுத்தனர். விடுதலைப் புலிகளின் முடிவை தமிழ் மக்களின் அடையாளமாக ஏற்றுள்ள தமிழ்த் தேசியம், தமிழரசுக் கட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், யதார்த்தத்தில் பார்க்கின் தமிழரசுக் கட்சி அதன் செயற்பாட்டைப் பொறுத்தளவில் தோற்றுப்போன ஒன்றாக மாறிவிட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி இயங்கி வருவதாக அதன் பதில் செயலாளர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். 1977ம் ஆண்டு தேர்தலில் இலங்கையின் இரண்டாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இருந்தமையால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு கிடைத்தது. அதே தமிழரசுக் கட்சி இன்று எவ்வாறு மூன்றாவது இடத்துக்குப் போனது என்பதை சுமந்திரன் சுயவிமர்சனம் செய்வாரானால் அரசியல் காலநிலை மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

தனித்துவத்தைப் பேணியே தமிழரசுக் கட்சி செயற்படுகிறது என்றும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளதும் கவனத்துக்குரியது. தனித்துவம் என்று இவர் குறிப்பிடுவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தெரிவை மதிக்கின்றனர் என்பதே தவிர சமகால தேர்தல் முடிவுகளை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனை சமகால அரசியல் காலமாற்றத்துக்குள் நின்று பார்க்கின் சுமந்திரனின் தோல்வியையே ஆழமாக நோக்க நேரிடும். 2010ல் தேசிய பட்டியல் ஊடாக ஓர் எம்.பியாக நியமிக்கப்பட்ட இவர் 2015 பொதுத்தேர்தலில் 58,043 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். 2020 தேர்தலில் இந்த எண்ணிக்கை ஐம்பது வீதத்தால் குறைவாகி 27,854 வாக்குகள் மட்டும் பெற்று வெற்;றி பெற்றார். ஆனால், 2024 தேர்தலில் இவரை மக்கள் தோற்கடித்தனர்.

இதன் பின்னர் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு சிவஞானம் சிறீதரன் எம்.பியால் தோற்கடிக்கப்பட்டார். இதன் பின்னரே தமிழரசுக் கட்சி தனது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் நிலைமை உருவாக்கப்பட்டது. இதனை தமிழரசுக் கட்சியின் தனித்துவ வரலாறு என்று சொல்லலாமா?

மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில் பதில் செயலாளராகவிருந்த சத்தியலிங்கம் எவ்வாறு பதவியை ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதும், அப்பதவிக்கு சுமந்திரன் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதும்கூட ஒரு தனித்துவ விடயம்தான். இந்த – குறுநாடகம் பற்றி விளப்பமாக வேறொரு தடவை பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னர் சிவஞானம் சிறீதரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவென நடத்தப்பட்ட கூட்டத்தில் சுமந்திரனும் சிறீதரனும் ஏகவசனங்களால் மோதிக்கொண்டனர். தமிழ்த்தேசிய பரப்பில் கட்சிகளுக்கிடையே சுமுகமான இணக்க நிலை ஏற்பட முடியாதிருப்பதற்கு சுமந்திரன்-சிறீதரன் மோதலும், சுமந்திரன்-கஜேந்திரகுமார் சேர்ந்தியங்க முடியாதிருப்பதுமே அடிப்படை காரணங்கள் என்று அண்மையில் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது யதார்த்தம்.

எவ்வகையிலாவது தெற்கில் அரசியல் சக்தியோடு இணைந்து தமிழ்த் தேசியத்தை அதற்குள் புதைத்துவிட வேண்டுமென்பதையே தனித்துவம் பேணுவதாக சுமந்திரன் கருதுவது போல தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. நடத்திய மேதின ஊர்வலத்தில் சுமந்திரன் செஞ்சட்டை அணிந்து அநுர குமர திஸ்ஸநாயக்க, ரில்வின் சில்வா ஆகியோர் சகிதம் சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் இப்போதும் முகம் காட்டுகின்றன.

அண்மையில் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத் திறப்பு விழாவில் அநுரவுக்கு அண்மையில் நெருங்கியவாறு சுமந்திரன் நின்றதை பார்க்க முடிந்தது. நூலக திறப்பு விழா நாடாவை வெட்டும் கத்திரிக்கோலை சுமந்திரனிடம் அநுர குமர கையளிக்க அதனை ஏற்று அவரே நாடாவை வெட்டி திறந்து வைத்தார். தேர்தல்கள் மூலம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் கட்சியில் பதில் செயலாளராகி அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, மட்டக்களப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை அபகரிக்கலாமா?

அன்றொரு நாள் ரணில் விக்கிரமசிங்க கையளித்த சிங்கக்கொடியை சம்பந்தன் உயர்த்திப் பிடித்ததற்கும், இப்போது அநுர குமர கையளித்த நாடாவை வெட்டி நூலகத்தை சுமந்திரன் திறந்து வைத்ததற்கும் என்ன வித்தியாசம்?

இந்நிகழ்வு பற்றிக் குறிப்பிடுகையில் இங்கு சுமந்திரன் தெரிவித்த ஓர் கருத்து அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ‘ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க ஜே.வி.பி. அரசியலின் ஆயுத கலாசார பின்னணியிலிருந்து வந்தவர். அதேபோன்று, எமது தமிழ் மக்களும் எமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்கள்” என்று சுமந்திரன் கூறியுள்ளது உண்மைக்குப் புறம்பானது.

1971 ஏப்ரலில் சிங்கள ஆட்சி பீடத்தைக் கைப்பற்றி நாட்டை ஆள்வதற்காகவே ஜே.வி.பி. ஆயுதமேந்தி படுகொலைகளை மேற்கொண்டது. ஆனால் தமிழ் மக்கள் தங்கள் பிறப்புரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் ஆயுதமேந்தத் தள்ளப்பட்டார்கள். நாட்டை ஆள்வதற்கு ஆட்சி பீடத்தை கவிழ்ப்பதற்காக தமிழ் மக்கள் போராடவில்லை. அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதமேந்த தள்ளப்பட்ட இவர்கள் தமிழ் மண்ணையும் மக்களையும் காப்பாற்றவே இறுதிவரை போராடினார்கள்.

இந்த உண்மையை மறைத்து, ஜே.வி.பி. போன்று தமிழ் மக்களும் சிங்கள அரசை கவிழ்த்து இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்கள் என்று வரலாற்றை எதற்காக சுமந்திரன் திரிபுபடுத்தினார்?

இதுபற்றி இன்னும் எழுதுவதற்கு பல விடயங்கள் உண்டு. காலநிலை அரசியல் மாற்றம் பற்றி அவ்வப்போது மேலும் எழுதுவோம். உண்மைகளை வரலாற்றில் பதிவிடுவோம்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp