திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு பௌதீக, ஆளனி வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனால் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதைவிட மருத்துவ அலட்சியப்போக்கு காரணமாக அநியாயமான முறையில் பல உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் திருகோணமலை வைத்தியசாலை இன்னும் உயிரோடு இருக்கிறதென்றால் அதற்கு அங்கு பணி புரியும் ஒரு சில வைத்தியர்களின் சேவையே காரணமாகும்.
திருகோணமலை வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முற்பட்டால் அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வைத்தியசாலைக்கு செல்கின்ற 90 வீதமானவர்கள் அதிருப்தியுடனேயே திரும்புகின்றனர் இதற்கு நிர்வாகத்தின் முறையற்ற, திறமையற்ற, அக்கறையற்ற நிர்வாகமே காரணமாகும்.
எது எவ்வாறாயினும் பொதுவாக எலும்பு முறிவு தொடர்பில் அதிகளவான நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். எனினும் இதற்கு தனியான களமோ அல்லது சத்திரசிகிச்சைக் கூடமோ இல்லாத நிலையில் குறித்த நேரத்தில் செய்யப்பட வேண்டிய சத்திர சிகிச்சைகளை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு எலும்பு முறிவு நோயாளி சத்திர சிகிச்சைக்காக குறைந்தது சுமார் ஒருமாத காலத்திற்குமேல் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் என்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் பாலகுமார் அவர்கள் எலும்பு முறிவு நோயாளிகளுக்கான தனியான களம் அமைப்பதற்கும், அதற்கான சத்திர சிகிச்சைக்கூடம் ஒன்றினை அமைப்பதற்கும் சில வைத்தியர்களுடன் சேர்ந்து அரச உயர்மட்டங்களுக்குச் சென்று நிதியினை பெற்று வந்தார். ஆனால் நிர்வாகத்தின் (தலைமைத்துவம்) நிலைப்பாடோ எதிராக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
1.வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டுமானங்களை தடுக்க நிர்வாகமே முறைப்பாடு செய்து நிறுத்தியது.
2.அரசாங்கத்தால் இரு மாடிக்கட்டடங்கள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிதியின் அரைவாசிக்கு மேற்பட்ட நிதியை திட்டமிட்டே திருப்பி அனுப்பியது.
3.கட்டி முடிக்கப்பட்ட பகுதியை திறப்பதில் தொடர்ந்து இழுத்தடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
4.சிறப்பாக செயற்பட்டு வந்த வைத்தியர்களுக்கும், தவறுகளை சுட்டிக்காட்டும் வைத்தியர்களுக்கும் எதிராக சதிகளை செய்தது.
5.ஊழல் செய்யும் தரப்பினருக்கு ஆதரவாக செயற்படும் நிர்வாகம் (தலைமைத்துவம்)
6.வைத்தியசாலையை முன்னேற்றுவது தொடர்பில் தலமைத்துவத்திடம் அக்கறையையும் காண முடியவில்லை.
7.திறமையற்ற, அக்கறையற்ற நிர்வாகம்.
இவ்வாறான சூழ்நிலையில் சிறந்த சேவை நோக்கம் கொண்ட திறமையான வைத்தியர் பாலகுமார் அவர்கள் எதிர்வரும் சில நாட்களில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல இருப்பதாக தெரிய வருகின்றது. இது எமது திருகோணமலை மாவட்டத்திற்கே பாரிய இழப்பாகும்.
திருகோணமலை வைத்தியசாலையின் எதிர்காலம், நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பின்மை தொடர்பாக நாம் கவனிக்க வேண்டியதும், பேச வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

