வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆளுநர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’ (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் கண் சத்திர சிகிச்சைப் பிரிவில் வட மாகாணம் இன்று புதியதொரு பரிணாமத்தை எட்டியுள்ளது. இலங்கையிலேயே வட மாகாணத்தில் மட்டும்தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. எமது மாகாணத்தின் இந்தச் சிறந்த சேவையினால் கவரப்பட்டு, ஏனைய மாகாணங்களில் இருந்துகூட மக்கள் இங்கு வந்து சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு செல்கின்றனர். இது எமது மாகாணத்துக்குக் கிடைத்த கௌரவமாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 கிராமங்கள் இச்செயற்றிட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த சுகாதாரத் துறையினரின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.எமது மக்களுக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்’ என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் செயற்பட வேண்டும். எமது இந்த முன்னோடி முயற்சிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது என்றும் வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களின் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் எம்.மலரவன் இதன்போது திட்டத்தின் நோக்கம் மற்றும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சி.சேரலாதன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
