உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்க முயற்சி..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, அவ்வாறு இல்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போன சில விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் கூறினார்.
சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் அந்த நபர் பற்றிய தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது என்றும், அபு ஹிந்தின் அடையாளம் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தனவின் அலைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலாந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்றும் கர்தினால் ஆண்டகை இதன்போது கேள்வி எழுப்பினார்.
“இந்தக் கொடூரக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை எமக்கு வெளிப்படுத்துங்கள். இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற பல்வேறு கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பின்னாலுள்ள நோக்கம் என்ன? அவற்றைச் செய்தது யார் என்பதைத் தேடிக் கண்டறியாமல் அனைத்தும் காலவோட்டத்தில் மறைந்துபோக அனுமதிப்பது நமது நாட்டில் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள மிக ஆபத்தான போக்காகும். 70களில் ஆரம்பமான இது, அண்மைக்காலம் வரை நீடித்த ஒரு தேசிய பேரழிவாகும்.
இந்த பாரிய விழுமியச் சீரழிவு காரணமாக, ஒழுக்கம், சட்டத்திற்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பு மற்றும் நாகரீகமான நடத்தை முறை என்பன எமது நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் கடந்த 4 தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பது அரசியல் தலையீடுகள் மற்றும் பொய்களின் செயற்பாட்டினால் கடினமாகியுள்ளது என்றே கூறவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அத்தகையதொரு சோகமான அனுபவமாகும். அதன் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரம் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது தனிநபருக்கும் புரிகிறதா என்ற கேள்வி எழுகிறது. சில தரப்பினர் விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை ஏன் தடுக்க முயல்கிறார்கள் என்பது எமக்கு விளங்கவில்லை.
2024 ஒக்டோபர் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை காலவோட்டத்தில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை யதார்த்தமாக்கி, முழுமையான, வெளிப்படையான, உண்மையின் அடிப்படையிலான விசாரணையை நடத்தி அதன் உண்மையை எமக்கு வெளிப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் இந்நாட்டின் வரலாற்றில் கருப்பு தினமொன்று உதயமானது. அந்த வருடத்தின் உயிர்த்த ஞாயிறு தினமான அன்று, மதத் தீவிரவாதத்தைக் கையில் எடுத்த பயங்கரவாதிகள் குழுவொன்று 03 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் உட்பட 08 இடங்களில் நடத்திய 10 தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெற்ற போதிலும், பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை அவற்றில் திருப்தியடையவில்லை. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில், பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கானின் தூதுவர் அந்துரேயாஸ் இயோஸ்வோவிச் ஆண்டகை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் மற்றும் ஏனைய மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதலாவது குண்டு வெடித்த காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட ஆராதனைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp