2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் நடைபெறும்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவைக் கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மகளிர் ற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (05.03.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை தேசிய கொண்டாட்டங்கள் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், மார்ச் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மாத்தறை கடற்கரைப் பூங்கா வளாகத்தில் சுமார் 200 பெண் தொழில்முனைவோரின் பங்கேற்புடன் “லிய சக்தி” (Liya Shakthi) மகளிர் தொழில்முனைவோர் வர்த்தகக் கண்காட்சி நடைபெறும்.
சர்வதேச மகளிர் தின தேசிய விழா, மார்ச் 8ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த மகளிர் அமைப்புகளின் சுமார் 1,500 உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வர்.
அத்துடன், இம்முறை மகளிர் தினத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் உள்ள சிறந்த பெண் தொழில்முனைவோரை மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் தெரிவு செய்து பாராட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துதல், பெண்களுக்கான கொள்கை மற்றும் உரிமைகள் கட்டமைப்பை உறுதிப்படுத்துதல், தலைமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், குடும்ப வன்முறை, இணையவழி வன்முறை (Cyber violence) மற்றும் பெண்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகளை ஒழித்தல் என்பன இந்த ஆண்டின் மகளிர் தினக் கொண்டாட்டங்களின் அடிப்படை இலக்குகளாகும்
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, அமைச்சின் செயலாளர் தரங்கனீ விக்ரமசிங்க மற்றும் இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ஜி. ஐ. சஜீவனி பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

