உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோவிற்குடியிருப்பு கிராமத்தை மீட்க உவர்நீர் தடுப்பணை மற்றும் வெள்ளவாய்க்கால் அவசியம்..!

kovirkudiyiruppu flood control | Pathivu News

நேர்காணல்
தவராசா சுபேசன்

தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும்-சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான க.தர்ஷனுடன் கிராமத்தினுடைய அனர்த்த நிலைமை மற்றும் தேவைப்பாடுகள் குறித்த நேர்காணல்.

*கேள்வி-கோவிற்குடியிருப்பு கிராமம் அடிக்கடி அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு கிராமமாக காணப்படுகின்றது. அவ்வாறு அடிக்கடி அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

​பதில்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் ஆகிய இரண்டு பிரிவுகள் ஒவ்வொரு வருடமும் மாரிகாலத்தில் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றன.
​பெரும்பாலும் மாரி காலத்தில் அங்கிருக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுகின்றது. வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் போது இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்குகின்றார்கள். மிகத் தாழ்வான இடத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதால் தான் மக்கள் அனர்த்தத்திற்கு இலகுவில் முகம் கொடுக்கின்றார்கள். அப்பகுதியில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு வெள்ள அனர்த்தத்திற்கும் வேறு சில அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

​*கேள்வி- அனர்த்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

​பதில்-மகிழங்கேணி கிராமத்திற்கு மிக முக்கியமாக உவர்நீர் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு உவர்நீர்த் தடுப்பணை அமைக்கப்படும் பட்சத்தில், வெள்ள நீர் அபாயம் மற்றும் கடல் நீர் உட்புகுதல் ஆகிய இரண்டு விடயங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றேன். இது தொடர்பான கோரிக்கைகளையும் நாம் பல தரப்புகளிடமும் முன்வைத்திருக்கின்றோம்.

கோவிற்குடியிருப்பின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் பிரிவு மக்கள் கடல் நீர் உட்புகுவதால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு தடுப்பணை தேவைப்பாட்டினை பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் உரிய தீர்வினைப் பெற முடியும்.

*கேள்வி-வெள்ள அனர்த்தம் மற்றும் கடல் நீர் உட்புகுதல் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் மக்கள் அந்த நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றனர்?

பதில்-பாதிப்புக்குள்ளாகும் மக்கள் உடனடியாக கிராம அலுவலர்,கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களின் உதவியோடு குடிமனைகளை விட்டு வெளியேறி பாடசாலைகள் மற்றும் சனசமூக நிலையங்களில் தங்க வைக்கும் நடைமுறையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அனர்த்த வேளையில் தற்காலிக முகாமாக இருந்து வருகின்ற சாவகச்சேரி சக்தியம்மன் பாடசாலை தரம் ஐந்து வரையான ஆரம்ப கல்விக்கான பாடசாலையாக காணப்படுகின்றது.
இதனால் அங்கு மலசலகூட வசதிகள் மற்றும் இட வசதிகள் போதாமல் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க இடைத்தங்கல் முகாமான பாடசாலையில் அடிப்படைச் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

*கேள்வி-கோவிற்குடியிருப்பு கிராமத்தில் உள்ள உப்புக்கேணி குளம் வெள்ள அனர்த்தத்தில் அதிக செல்வாக்குச் செலுத்துவதாக கடந்த மாரி காலத்தில் பேசப்பட்டது.அது தொடர்பான உங்கள் பார்வை எவ்வாறு உள்ளது?

பதில்-உப்புக்கேணிக் குளம் கோவிற்குடியிருப்பு கிராமத்தின் தரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. அதன் கொள்ளளவு போதாமையினால் கடந்த காலங்களில் பல குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்திருந்தன.

இந்நிலையில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்ட சாவகச்சேரி நகரசபையினரால் உப்புக்கேணி குளம் தூர்வாரப்பட்டு அதன் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கடந்த இரு வருடங்களாக அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டதால் குளம் நிறையும் நிலைமை ஏற்பட்டது.இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக நீரை நீர்ப் பம்பி ஊடாக இறைத்து கடலுக்கு கடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.கடந்த காலங்களில் இயற்கையாக காணப்பட்ட குளத்தற்கான வாய்க்கால் சட்டவிரோத கட்டிடங்களால் தடைப்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரண்டு மாரிகளில் தற்காலிகமாக நீர்ப்பம்பிகள் மூலமே மேலதிக நீரை கடலுக்கு கடத்த வேண்டிய தேவை இருந்தது.

நீரை கடலுக்கு கடத்த அதிக பாவனை கொண்ட சாவகச்சேரி கச்சாய் வீதியினை இரண்டு நாட்கள் தடை செய்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தோம். எனவே 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் எவ்வாறு உப்புக்கேணி குள மேலதிக நீர் இயற்கையாக கடலைச் சென்றடைந்தது என்பதை இனங்கண்டு இதனை ஒரு பொதுச் செயற்திட்டமாக முன்னெடுத்து, அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் மதில்கள் இருப்பின் அவற்றை உடைத்து வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பதன் மூலமே வெள்ள அனர்த்தத்திற்கு நிரந்தர தீர்வினை காண முடியும்.

*கேள்வி- உப்புக்கேணிக் குளம் தற்பொழுது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் குறை சொல்கின்றார்கள்.அது தொடர்பாக உங்களுடைய கருத்து?

பதில்- உப்புக்கேணிக் குளம் ஆழப்படுத்தப்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்தான ஒரு பகுதியாகவே அது காணப்படுகின்றது. எனவே அதற்கான ஒரு பாதுகாப்பு வேலி மிக மிக முக்கியமானது. அதனை கட்டாயமாக நகரசபை செய்ய வேண்டும். இதை நாம் கடந்த காலங்களில் தவிசாளரிடமும் கோரி இருந்தோம். அவரும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.குளத்திற்கான பாதுகாப்பு வேலியையும் மிக விரைவாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் உப்புக்கேணி குளத்திற்கான வீதி மிகவும் பள்ளமாக இருக்கின்றது. சாதாரண மழைக்கு கூட அந்த வீதி தடைப்படுகின்றது. ஆகவே நகர சபையானது ஏனைய இடங்களில் வீதிகளை செப்பனிடுவது போன்று உப்புக்கேணி வீதியையும் கருத்தில் கொண்டு மிக விரைவாக 2026ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மூலமோ அல்லது வேறு நிதி ஒதுக்கீடுகள் ஊடாகவோ மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்து வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும்.

*கேள்வி-கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கம் எவ்வாறான அபிவிருத்திச் செயற்திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ளது?

பதில்-எமது கிராமத்தில் பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.பரந்து பட்ட கிராமமாக எமது பிரிவு காணப்படுகின்றது.
குறிப்பாக லிகோரியார்-மகிழங்கேணி கடற்கரை வீதிகள் இணைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க எமது கிராம அபிவிருத்திச் சங்கம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தென்மராட்சிப் பிரதேசசெயலாளரிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்களின் நீண்ட கால குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.சுமார் 300மீற்றர் நீளமான கடற்கரை வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இதனை விட மேலும் பல திணைக்களங்களுடனும் இணைந்து மக்களுடைய தேவைப்பாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்து வருகின்றோம்.எதிர்காலத்தில் கிராம மாணவர்களுடைய கல்வி,பாதுகாப்பு,ஊட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.எனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

 

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp