யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
முறையான சுற்றாடல் அனுமதியைப் பெறும் வரை எவ்வித கட்டுமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என அந்த சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ, மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமையவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தரையிறக்கப் பணிகள் உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வித அனுமதியுமின்றி அங்கு மண் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து , கடந்த 18ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு இந்த உத்தியோகபூர்வ தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றாடல் சட்ட விதிகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகார சபை எச்சரித்துள்ளது.
இதேவேளை, முறையான அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கமும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
