புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகமான ஆறாம் வகுப்பு பாடத் தொகுதிகள் அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்ற பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் நாடாளுமன்றக் கருத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் மறுத்துள்ளது.
குறிப்பாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி தொகுதியின் தயாரிப்பு மற்றும் அச்சிடுதலுக்கே சுமார் 65 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரச்சினை உள்ள பகுதிகளை நீக்கி மீதியை பயன்படுத்தினாலும் அது நஷ்டமாகவே கருதப்பட வேண்டும் என்றும், அசல் வடிவில் தொகுதியை விநியோகிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த தொகுதிகள் 2026ல் மாணவர்களுக்கு வழங்கப்படாததால், பாடசாலைகள் மீண்டும் பழைய பாடத்திட்டத்திற்கும் பழைய பாடப்புத்தகங்களுக்கும் திரும்பியுள்ளன. இதனால் பழைய புத்தகங்களை மீண்டும் அச்சிடுதல், சேமித்தல், விநியோகம் போன்றவற்றிற்கும் கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்
இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, ஆறாம் வகுப்பு தொகுதிகளில் எதுவும் திரும்பப் பெறப்படவில்லை என்றும், முதல் தவணை தொகுதிகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன என்றும், நிதிநஷ்டம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டில் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அச்சிடப்பட்ட தொகுதிகள் அப்போது பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். பழைய பாடத்திட்டப் புத்தகங்களின் விநியோகம் தொடங்கியுள்ளதுடன், இம் மாதம் நடுப்பகுதிக்குள் அதை முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம் பிரதமர் கருத்தை மறுத்தது
