அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் தங்களது உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி அசோக குணரத்னே கூறுகையில், அனைத்து நிபுணர் மருத்துவர்களும் இன்று வழக்கம்போல் தங்களது கடமைகளை தொடர்வார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் அளிக்கத் தவறியதாகக் குறிப்பிட்டு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்த பின்னணியில் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
இதற்கிடையில், நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் நிபுணத்துவ மருத்துவர்களும் இன்று முதல் இந்த நடவடிக்கையில் இணைவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி பிரபத் சுகததாச தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்தக் கருத்தை மறுத்த வைததிய கலாநிதி அசோக குணரத்ன, மருத்துவ நிபுணர்கள் சங்க உறுப்பினர்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
