இலங்கையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரமாக்கும் என்று எச்சரித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் தற்காலிக கடமைகள் அல்லது பதிலீட்டு கடமைகள் வழங்குவதை வாபஸ் பெறுகின்றனர்.
தற்காலிக கடமைகளுக்காக மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறுவதாக இருந்தாலும், இதுவரை சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஹன்சமால் வீரசுரிய கவலை வெளயிட்டுள்ளார்
இதற்கிடையில், தீவிரமாக மருத்துவ நிபுணர்கள் குறைவு காணப்படும் பல பிரிவுகளில் மருத்துவர்கள் தொடர்ந்தும் மாற்றுப்பணிகளை மேற்கொண்டு வந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இனிமேல் நிபுணத்துவம் உடைய மருத்துவர்கள் தங்களது அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நிபுணத்துவ சேவைகள் வழங்குவார்கள்.
எந்த மருத்துவமனையில் நிபுணர்கள் பணியமர்த்தப்படவில்லையோ அங்கு மாற்றுப்பணிகளை வைத்தியர்கள் செய்யமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் ஆய்வுகூட சேவைகளுக்கான பரிந்துரைகளும் நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன் அரசியல் குழுக்கள் நடத்தும் சுகாதார முகாம் மற்றும் கிளினிக்குகளில் மருத்துவர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்பதனையும் நிறுத்தி விட்டனர்,
புதிய மருத்துவமனைகள் மற்றும் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை இல்லாத இடங்களில் மருத்துவர்கள் இணைவதை நிறுத்தி விட்டனர்;; என்பது குறிப்பிடத்தக்கது.
