நாட்டில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
சமூக வலைதளங்களை முற்றாகத் தடை செய்வது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால், இக்கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திரை நேரத்தைக் குறைத்து உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தவும், இணைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கியமாக, சிறுவர்கள் வன்முறை மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இதற்காக இலங்கை கணினி அவசரப் பிரிவு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து அமைச்சு செயலாற்றவுள்ளது.
இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமென இலங்கை தேசிய ஊடக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காணொளிச் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, இணையவழிச் சுரண்டல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வயது உறுதிப்படுத்தல் முறையைக் கட்டாயமாக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கான வயதெல்லையைத் தீர்மானிக்க நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
