உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒரு இக்கட்டான மாற்றத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய கனடியப் பிரதமர் மார்க் கார்னி, உலக நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த ஒரு கற்பனையான விதிகள் நிறைந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை உலக அரங்கில் சொல்லப்பட்டு வந்த ‘சமமான விதிகள்’ என்பது வெறும் பொய் என்றும், பலம் வாய்ந்த நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும்போது அந்த விதிகளைத் தூக்கி எறிந்துவிடுகின்றன என்றும் அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வல்லரசு நாடுகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும் இந்தச் சூழலில், பலவீனமான நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போர் காரணமாக, உலகப் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை போன்ற சிறிய நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பழைய கொள்கைகளைக் கைவிட்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
இலங்கை தனது வர்த்தகத்தைப் பெருக்க இந்தியாவுடன் வலுவான ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதுடன், ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பிலும் இணைய முயற்சி செய்ய வேண்டும். ஜப்பான் முன்மொழிந்துள்ள பொருளாதாரப் பாதைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
மிக முக்கியமாக, நம் நாட்டின் நலன் என்ன என்பதைத் தீர்மானித்து, உலக அரங்கில் நமது குரலை உரக்கப் பதிவு செய்ய வேண்டும். சிறிய அரசியல் லாபங்களுக்காகப் போட்டி போடுவதை நிறுத்திவிட்டு, சர்வதேச அளவில் ஒரு நாடாக நாம் முன்னேறத் தவறினால், நமக்கான முடிவுகளை மற்ற நாடுகள் எடுக்கும் நிலை உருவாகும் என இந்த உரை எச்சரிக்கிறது.
What’s your Reaction?
