இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மனிதவளக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இருப்பதுடன், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் குழப்பம் நிலவி வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதி அமைச்சர் எம். எம். ஐ. அர்காம் தெரிவித்துள்ளார்.
மேலும், மறுசீரமைப்பு பணிகளை விரைவாக முன்னெடுக்க விசேட பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
