2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 11.57 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் அந்தக் கோரிக்கையை இக்காலாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த முன்மொழிவு 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அந்த முன்மொழிவில் பல தவறுகள் காணப்பட்டதால், அவற்றை திருத்தி 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்குள் புதிய முன்மொழிவை வழங்குமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக ஜனவரி 8 ஆம் திகதி மின்சார சபை அறிவித்துள்ளதாகவும், இதுவரை அந்த முன்மொழிவு கிடைக்கவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட முன்மொழிவு கிடைத்த பின்னர் பொதுமக்களின் கருத்துக் கேட்பு மற்றும் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்குக் குறிப்பிடத்தக்க காலம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலாண்டின் எஞ்சியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்காக மின் கட்டணத்தை மாற்றினால், சதவீத அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை மாற்றாமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டணத் திருத்த முன்மொழிவை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
