இந்தியா – இலங்கை இடையிலான நில இணைப்பு திட்டம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இலங்கை அரசின் பதிலை இந்தியா எதிர்பார்த்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர இது குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்தியா, இலங்கை இடையே நேரடி நில இணைப்பை ஏற்படுத்தும் இந்த திட்டம், இலங்கை தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்ட முன்மொழிவு எனவும், அதற்கு முழுமையான ஆதரவு வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தெற்குப் பகுதியையும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த நில இணைப்பு திட்டம், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகின்றது.
எனினும், சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள், பல்வேறு தரப்புகளின் எதிர்ப்புகள் மற்றும் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தேவைப்படுவது உள்ளிட்ட சவால்களும் இந்த திட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளன.
