யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், அண்மைக் காலமாக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான எதிர்வுகூறல்களை வெளியிட்டு வருவதாக சமூகத்தில் கவலை எழுந்துள்ளது.
முன்னதாக ‘டிட்வா’ பேரிடர் தொடர்பில் அவர் வெளியிட்ட கணிப்பு ஓரளவிற்கு உண்மையாக அமைந்ததைத் தொடர்ந்து, குறித்த பேராசிரியர் ஊடகங்களில் அதிகம் கவனிக்கப்படத் தொடங்கினார்.
இதன் பின்னர், தொடர்ச்சியாக பேரழிவு குறித்த எதிர்வுகூறல்களை அவர் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பெரும் வெள்ளப் பேரழிவு ஏற்படவுள்ளதாக அவர் கூறிய கருத்துகள், மக்களிடையே கடும் பதற்றத்தையும் பயத்தையும் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், குறித்த கணிப்புகள் அதிகாரபூர்வ தரவுகள் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உறுதிப்படுத்தலுடன் முன்வைக்கப்படாததால், யாழ்ப்பாண மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் அவற்றை கவனத்தில் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர் முன்னறிவிப்பு என்பது மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டிய விடயமாகும் என்றும், அறிவியல் ஆதாரங்கள், அதிகாரபூர்வ ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே இத்தகைய தகவல்கள் பொதுமக்களிடம் பகிரப்பட வேண்டும் என்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அச்சத்தை தூண்டும் வகையிலான எதிர்வுகூறல்கள், பொதுமக்களின் மனநலத்தையும், சமூக அமைதியையும் பாதிக்கக்கூடும் என்பதால், ஊடகங்களும் கருத்து தெரிவிப்பவர்களும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும், பேரிடர் தொடர்பான தகவல்கள் துல்லியமாகவும் சமநிலையுடனும் வெளியிடப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது
