இந்தியாவில் நடக்கவிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில், இந்தியா–நியூசிலாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 இருபதுக்கு 20 (டி-20) போட்டிகளில் சந்திக்க உள்ளன.
ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் ஜனவரி 11-ஆம் திகதி தொடங்குகிறது. இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த 5 டி-20 போட்டிகள் நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் அதிரடி வீரர் திலக் வர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்கிறார்.
திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது அவர் நல்ல முன்னேற்றத்துடனும், சீராகவும் உள்ளார்.
மீதமுள்ள 2 டி-20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பாரா என்பது அவரது உடல் நலன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

