தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வேலன் சுவாமி உட்பட முன்னர் கைது செய்யப்பட்ட ஐவரும், மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி எஸ். ஸ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தது.
இன்றைய விசாரணையின் போது, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பின் ஊடாகவும், ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் மூலமாகவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும், ஜனநாயக உரிமையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு, குற்றவியல் சட்டத்தின் 106 ஆம் பிரிவின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர முடியாது என்பதையும் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.
அதன் அடிப்படையில், குறித்த வழக்கை நிராகரிக்குமாறு நீதிமன்றை கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் சந்தேகநபர்கள் அனைவரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
