முன்மொழியப்பட்ட கல்வி மாற்றங்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன், அவற்றை ஒரு வருடம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய கல்வி மாற்றங்களில் பல குறைபாடுகள் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவசரமாக நடைமுறைப்படுத்துவது பாடசாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் என சங்கம் எச்சரித்துள்ளது.
ஆறாம் வகுப்பு ஆங்கில பாடப்பிரிவில் ஏற்பட்ட சர்ச்சை, கல்வி மாற்றங்களில் உள்ள பல பிரச்சினைகளில் ஒன்றே என இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் நீட்டிக்கும் தீர்மானம் அண்மையில் வாபஸ் பெறப்பட்டமை, கல்வி மாற்றங்கள் இன்னும் முழுமையாக தயார் நிலையில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு பல சுற்றுநிருபங்களை வெளியிட்டு பின்னர் தீர்மானத்தை திரும்பப் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பொருத்தமற்ற இணையதள குறிப்பு இடம்பெற்றிருந்த காரணத்தால், ஆறாம் வகுப்பு ஆங்கில பாடநூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிராக பல ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகியிருந்த நிலையில், ‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளை முன்னிட்டு, அந்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
