நாட்டின் கல்வி மாற்றங்கள் எதிர்காலத்தை நோக்கி அமைய வேண்டிய அவசியம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்
உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கல்வி முறையை புதுப்பிக்காவிட்டால், இலங்கையின் இலவச கல்வி முறை தனியார் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை கல்வி முறையில் இணைப்பது இன்றியமையாததாகிவிட்டதாக கூறினார்.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கல்வி முறை மாற்றப்படாவிட்டால், இலங்கையின் இலவச கல்வி முறை சவாலுக்கு உள்ளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இலவச கல்வியை அறிமுகப்படுத்திய சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாச, அந்த கல்வி முறையை புதுமை மற்றும் நவீனத்துவத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தினார்.
சரியான கல்வி பாடத்திட்ட மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், நாட்டின் முன்னேற்றம் பல தசாப்தங்கள் பின்னடைவை சந்திக்கும் என அவர் எச்சரித்தார்.
