யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்தப் போராட்டம் இன்று (காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது.
‘அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி’ என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அதற்கான அழைப்புத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த இரு வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டத்தின் போது, பொலிஸாரின் நடவடிக்கையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அந்தச் சம்பவத்தின் போது, அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாக்கப்பட்டதுடன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறினாலேயே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்குள்ளான வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
