இலங்கை உயர் நீதிமன்றம் மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயிற்சி, இந்திய தேசிய நீதித்துறை பயிற்சி கலாசாலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஒரு வாரம் நீடித்த இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில், நீதிமன்ற மற்றும் வழக்கு மேலாண்மை, சிறுவர் நீதித்துறை, பணம் கையாளல் குற்றங்களைத் தடுக்கும் நீதித்துறை நடவடிக்கைகள், தண்டனை விதிப்பு நடைமுறைகள், சுற்றுச்சூழல் சட்டங்கள், இணைய குற்றங்கள், மின்னணு சாட்சிகள், குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் குற்றவியல் ஆய்வுச் சாட்சிகள் பயன்பாடு, நீதிபதிகளின் மனஅழுத்தக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்திய தேசிய நல்லாட்சிக் கற்கை மையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்திற்கிடையிலான உடன்படிக்கையின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 300 இலங்கை அரச அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ்விரு திட்டங்களின் மூலம், தற்போது ஆண்டுதோறும் சுமார் 1,000 இலங்கையர்கள் இந்தியாவின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளால் பயன் அடைந்து வருகின்றனர்.
