தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் ஒன்றிணைவது சாத்தியமில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரவுள்ள அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமையவுள்ளது
நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது.
அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை.
அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும்.
ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது.
சுமஸ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமானது, இதுவரையிலான தீர்வு திட்டங்களில் சிறப்பானது.
அதனை வைத்து அதில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக அதில் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு,
அதனை பூரணப்படுத்த வேண்டும். அவ்வாறு பூரணப்படுத்தப்பட்டால் அதனை தமிழர்களின் தீர்வு யோசனையாக முன் வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

