யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், தரையை ஊடுருவும் ராடர் தொழில்நுட்பத்தின் (GPR) மூலம் பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நவீன ஸ்கானிங் இயந்திரம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஆய்வுப் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன.
செய்மதிப் படங்களை அடிப்படையாகக் கொண்டு புதைகுழிக்கு வெளியேயும் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை, துறைசார் நிபுணர் சோமதேவாவால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அகழ்வுப் பணிகளை புதைகுழிக்குள் மட்டுமின்றி பரந்த இடங்களிலும் மேற்கொள்ளவேண்டும் என உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இலங்கையில் இது வரை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட சில பகுதிகளில் யுஎஸ்ஐ ஸ்கானர் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தரையை ஊடுருவும் ராடர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ள முதலாவது இடமாக செம்மணி அமைகிறது.
இந்த ராடர், காங்கிரீட் போன்ற தடைகளை ஊடுருவி, நிலத்தடியில் உள்ள உடற்கூறு மற்றும் பொருட்களை திரையில் தெளிவாகக் காண்பிக்கும் திறன் கொண்டது.
கனடா உள்ளிட்ட நாடுகளில் இதனை மனிதப் புதைகுழிகளை கண்டறிய பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கானிங் பணிகளை எளிதாக்கும் வகையில் புதைகுழிக்கு அண்மையிலுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மேலும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விரைவில் இந்த பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
