அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், சுகாதார அமைச்சர்; நலிந்த ஜயதிஸ்ஸ எழுத்துப்பூர்வமான உடன்படிக்கைகளை வழங்கியிருந்ததாகச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, படிப்படியாக தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தையே தாம் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், எட்டப்பட்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றாமல் சுகாதார அமைச்சர் அதனை மீறிச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான செயல்பாடுகள் மூலம் சுகாதாரத் துறையானது, பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கவோ அல்லது மருத்துவர்களின் நிலையை மேம்படுத்தவோ அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை என்பது வெளிப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பையும் மருத்துவர்களையும் பாதுகாப்பதே இதன் உண்மையான நோக்கம் என்றும் வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க விளக்கமளித்துள்ளார்.
நாளை அறிவிக்கப்படவுள்ள அடுத்தகட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
