திருகோணமலை காணி விவகாரத்தை ஒட்டி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வணக்கத்திற்குரிய பாலங்கொட கசப்ப தேரர் உள்ளிட்ட பத்து பேர் 9ஆம் தேதி வரை மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கடலோர பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்கும் அனுமதியின்றி கட்டிடங்கள் நிர்மாணித்ததற்குமான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கோட்டுவா வீதியோரத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சம்புத்தத்துவ ஜயந்தி போதிராஜ விஹாரயா’க்கு சொந்தமானதாகக் கூறப்படும் காணியில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற பொலீசார் முயன்றதாகக் கூறி, பாலங்கொட கசப்ப தேரர் மற்றும் ஆதரவாளர்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை தொடங்கியிருந்தது.
ஆனால் பின்னர், கடற்கரைக்கு அண்மையில் அமைந்திருந்த அந்த காணியில்; ஒரு உணவகம் செயல்பட்டு வந்தது என்பது வெளிச்சத்துக்குவந்தது.
கடலோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் அந்த உணவகத்தை அகற்றியதுதான் போராட்டத்திற்கான முக்கிய காரணம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு, கடலோர பாதுகாப்புச் சட்ட மீறலும் அனுமதியற்ற கட்டிட நிர்மாணமும் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில், திருகோணமலை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 11 பேரை சந்தேக நபர்களாக பெயரிட்டுள்ளது.
சிறை வைக்கப்பட்டர்களில்; பாலங்கொட கசப்ப தேரர், ‘ஸ்ரீ சம்புத்தத்துவ ஜயந்தி போதிராஜ விஹாரயா’வின் பிரதம அதிபதி வணக்கத்திற்குரிய திருகோணமலை கல்யாணவன்ஷ திஸ்ஸ தேரர் மற்றும் மேலும் இரு தேரர்களும் அடங்குகின்றனர்.
