2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் விசாரணைகளின் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து ஏற்பட்ட நட்ட ஈடாக 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மின்கணிப்பான் அதாவது மீட்டர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 1,259 சம்பவங்கள் மற்றும் சில சட்டவிரோத தொழில்நுட்ப மின்சாரம் பெற்ற 72 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய குற்றச்செயல்கள் மின்சார சபைக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது
சட்டவிரோத மின்சார பயன்பாட்டில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவின் விசாரணை முகாமையாளர் இந்திக பிரணந்து தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு சமூக பின்னணிகளைச் சேர்ந்த நபர்கள் அடங்குவதாகும்.
மின்சார மோசடிகளுடன் தொடர்புடைய தகவல்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் 011-2422259 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 1987 என்ற உதவி எண்னையோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
