விசேட தேவைகுட்பட்ட பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சந்தேக நபர் 2025 மே மாதத்தில் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் சென்றதாகவும், தனது அதிகாரப்பூர்வ வேலைத் துறைக்கு வெளியே தற்காலிக பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இஸ்ரேலில் அமைந்துள்ள பெத் ஷெமேஷ் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, இன்டர்போலின் இஸ்ரேல் பிரிவிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், மாற்று திறனாளியான சிறுமி ஒருவருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்காகக் கருதப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலில் குற்றச்செயல்கள் மற்றும் சமூக நடத்தை தொடர்பாக கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன என்றும், தீவிர குற்றங்கள் வெளிநாட்டு நபர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனையும் பின்னர் நாடுகடத்தலையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டு சட்டங்களையும் சமூக ஒழுங்குகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
