நாட்டின் பாசன அமைப்புகளை பாதுகாப்பதற்காக நீர்த்தேக்கக் குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படும் என விவசாய, கால்நடை, காணி; மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்த நடவடிக்கைகள் பின்வாங்கப்படமாட்டாது என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ‘காலநிலை புத்திசாலித்தனமான நீர்ப்பாசன விவசாய திட்டம்’ கீழ் ‘கேஸ்கேட்’ முகாமைத்து குழு கையேடு அறிமுக நிகழ்வில் உரையாற்றிய அவர், குள பாதுகாப்பு நிலங்களிலும் ‘கேஸ்கேட்’ பாசன அமைப்புகளிலும் இடம்பெறும் அத்துமீறல்களே அவற்றை புதுப்பித்து பாதுகாப்பதில் மிகப்பெரிய தடையாக உள்ளன என்று குறிப்பிட்டார்.
இந்த நீர்வள அமைப்புகள் நாட்டின் விவசாயத்திற்கும் நீர்வளப் பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகள் அத்துமீறல்களின்றி இருக்க வேண்டும். அரசியல் தலையீடுகள் இந்த நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது,’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
அனுராதபுரம் நுவர வௌh உள்ளிட்ட சில குள பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மாற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், சில இடங்களில் குடியிருப்பாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இடமாற்றம் செய்யப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதோடு, மேம்பட்ட வாழ்வாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மக்கள் குடியேற்றப்பட்டு சிறந்த வாழ்வாதாரம் வழங்கப்பட்ட முன்னுதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். ‘மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை வழங்கப்பட்டபோது அது பிரச்சினையாக மாறவில்லை,’ எனவும் அவர் கூறினார்.
