மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழு பலமுறை ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான சிக்கல் காரணமாகவே இந்தத் தேர்தலை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக அவர் கூறினார்.
தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத வரை ஆணைக்குழுவால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தெளிவும் நடவடிக்கையும் கோரி சுமார் நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதையும், அதற்கு இதுவரை பதில் வராததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலை முன்னைய முறையில் அல்லது புதிய எல்லை நிர்ணயம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், புதிய முறையில் நடத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;
புதிய முறையெனில் எல்லை நிhணய செயல்முறைக்கு சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகும் என்பதால் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
2015 முதல் 2020 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் காரணமாக ஏற்பட்ட சட்ட சிக்கலால் மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கை முன்பே தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அது அப்போது நிராகரிக்கப்பட்டதால் செயல்முறை இடை டுவில் நின்றுவிட்டது.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
