ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கான ஏயார்பஸ் விமான கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஸாவின் இளைய மகன் ஷமேந்திர ராஜபக்ஸாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமார உத்தரவிட்டுள்ளார்.
அவர் இவ்வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
2012–2013 காலப்பகுதியில் 10 ஏர்பஸ் விமானங்களை வாங்கிய ஒப்பந்தத்துடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
அரச தரப்பு சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு இணங்க ஷமேந்திர ராஜபக்ஸா சந்தேக நபர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தலைமை செயற்பாட்டு அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஏற்கனவே சந்தேக நபர்களாக உள்ளனர்; அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறப்படும் ஷமேந்திர ராஜபக்ஸாவை கைது செய்ய இன்டர்போல் உதவியும், ‘சுநன ழேவiஉந’ சிவப்பு அறிவித்தல் விடுக்கவும் நீதிமன்றம குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
2012–2013 இல் 13 பழைய விமானங்களை சேவையிலிருந்து நிறுத்தி 14 புதிய விமானங்களைப் பெற திட்டமிடப்பட்ட நிலையில், ஏயார்பஸ் நிறுவனத்துடன் ஆறு ஏ-330 மற்றும் நான்கு ஏ-350 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
10 விமான கொள்முதல் தொடர்பாக அமெரிக்க டொலர் 16.84 மில்லியன் லஞ்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது.
அதில் 2 மில்லியன் டொலர், கபில சந்திரசேனாவின் மனைவி தொடர்புடைய புரூணை நிறுவன கணக்கிற்கு சென்றதாகவும், பின்னர் அந்தத் தொகைகள் சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது கணக்கிற்கும், இலங்கையில் உள்ள இரு கணக்குகளுக்கும் மாற்றப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
2013 ஆம் ஆண்டு ஷமேந்திர ராஜபக்ஸாவிற்கு சொந்தமான வங்கி கணக்கிற்கு 160,000 அமெரிக்க டொலர் பரிமாறப்பட்டிருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது.
அவர் அமெரிக்காவில் இருந்ததால் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை. ஏயார்பஸ் ஒப்பந்த முடிவுகள் எடுக்கப்பட்ட காலத்தில் அவர் சம்பந்தப்பட்ட இயக்குநர் சபை உறுப்பினராக இருந்ததாகவும், ஒரு கூட்டம் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகவும் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
