கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரவலுவூட்டல் அமைச்சின் ‘பிரஜா சக்தி’ திட்டம், உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் கிராம அபிவிருத்தி செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்கள் பங்கேற்பையும் அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களின் அதிகாரங்களைத் தடுக்கிறது என குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அமைச்சு இவ்விளக்கத்தை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, ‘பிரஜா சக்தி’ திட்டம் அபிவிருத்தி பணிகளில் பொதுமக்களின் பொறுப்புணர்வையும் ஈடுபாட்டையும் அதிகரித்து, செயல்திறனை மேம்படுத்துவதே நோக்கம் என்றும், உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களில் எந்தவிதத் தலையீடும் இல்லை என்றும் கூறினார்.
அவரது விளக்கத்தின் படி, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 25 பேரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகின்றது.
இதில் பெண்கள், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர்.
அபிவிருத்தித் திட்டங்களின் எந்த கட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது.
அத்துடன், தேவையான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னுரிமைப் பட்டியலையும் இந்தக் குழுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் இந்தத் திட்டம் வழியாக மாற்றப்படுகின்றன என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
