நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை ஆய்வு செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கக் கோரி 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த தீர்மானம், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து, அதனை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னே நிராகரித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், நிலையான கட்டளை 27 இன் கீழ் 3 இன் அடிப்படயில் வழங்கிய தீர்ப்பில், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பணிகள் மக்களின் நீதித்துறை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி முழுமையான நீதித்துறை சுயாதீனம் உண்டு என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்க நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் ஆகிய விடயங்களில் செயல்படும் நீதிச்சேவை ஆணைக்குழுவை பாராளுமன்றம் கண்காணிக்கவோ, ஆய்வு செய்யவோ அதிகாரம் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறான முயற்சிகள் அரசியலமைப்பின் 3 மற்றும் 4ஆவது கட்டுரைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பிரிவு கோட்பாட்டை மீறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது நிதிகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு நம்பிக்கை பொறுப்பு இருந்தாலும், அதனால் நீதித்துறையின் மீது மேலாதிக்கம் கிடைக்காது என்றும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவை பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் விசாரிப்பது, நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்கும் செயல் என்றும், அதனால் மக்களின் நீதித்துறை அதிகாரமே தளர்த்தப்படும் என்றும் அவர் தீர்மானித்தார்.
இந்த தீர்ப்பு, இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முக்கியமான தீர்ப்பாக அமையும் என்றும், நாடாளுமன்ற மரபையும் அதன் மரியாதையையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
