இலங்கையில் 18 வயதிற்குக் குறைவான சில குழந்தைகள் சட்டவிரோத குழந்தைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தொழில் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, பாடசாலை சீருடை அணிந்தபடியே வேலைக்குச் செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சந்தேகத்திலிருந்து தப்பிக்கவும், பாடசாலையிருந்து வீடு திரும்புவதாக தோற்றமளிக்கவும் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ இதுகுறித்து தெரிவித்ததாவது, பொருளாதார சிரமங்கள் காரணமாக சில குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை விடுத்து வருமானம் ஈட்டும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை செல்வதற்குப் பதிலாக, பாடசாலை சீருடை அணிந்தபடியே பல்வேறு வேலைகளில் ஈடுபடும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சில மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினையை சமாளிக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன என்றும், இதைத் தீர்க்க மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
குழந்தைத் தொழில் அதிகளவில் பதிவாகும் துறை பெரும்தோட்டத் துறையாகும் எனவும், இதே போக்கு மீன்பிடித் துறையிலும் சுற்றுலா துறையிலும் காணப்படுவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை பெற்றோருக்கு உதவுவது எல்லாக் காலங்களிலும் குழந்தைத் தொழிலாகக் கருதப்படாது என்றும் அவர் விளக்கினார்.
அதற்கான தெளிவான அளவுகோல்கள் உள்ளன. குழந்தை செய்யும் வேலை நாளின் பெரும்பகுதியை பிடிக்கக் கூடாது; அது அவர்களின் கல்வியையும் உடல் மற்றும் மனநலத்தையும் பாதிக்கக் கூடாது என்பதும் அவற்றில் அடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
