நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தர அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரை மின் நிலையம் எந்தவிதப் முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சு செயலாளர் மற்றும் இடைக்கால இலங்கை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, குறித்த தரமற்றதாக கூறப்படும் நிலக்கரி கேள்வி கோரல் தொடர்பான அறிக்கை இன்னும் அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்றார்.
எனினும், அந்த நிலக்கரியைப் பயன்படுத்துவது இயந்திரங்களின் பாதுகாப்பு அல்லது மின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்று லக்விஜய நிலையம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அறிக்கை கிடைக்க மேலும் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகலாம் எனவும் அவர் மதிப்பிட்டார்.
அரசாங்கம் எந்த இழப்பையும் சந்திக்காது என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட கேள்வி கோரல் வழங்குநருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர்; நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவாஜ், தரமற்றதாக கண்டறியப்பட்ட ஒரு நிலக்கரி கப்பல் நிலக்கரிக்காக வழங்குநரிடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் அவர் இதனை விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
