தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமநிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்குப் பதிலாக ஓய்வூதியமாக வழங்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை கலந்துரையாடவுள்ளது.
இதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை நீண்ட காலமாக பரிசீலனையில் இருந்து வந்ததாகவும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சபை உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊழியர் சேமநிதி தொகையை ஒரே தடவையில் வழங்காமல், ஓய்வூதியமாக வழங்குவது இதன் பிரதான நோக்கமாகும்.
இதன் கீழ், ஊழியர்கள் தங்களின் சேமநிதி தொகையின் ஒரு பகுதியை ஓய்வூதியமாகப் பெறுவதற்கான தெரிவும்; வழங்கப்படவுள்ளது.
உலகின் பல நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் கிடைக்கும் பெரிய தொகையை சரியாக நிர்வகிக்க முடியாமல் பல ஓய்வுபெற்ற ஊழியர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், சிலர் மோசடி திட்டங்களில் சிக்கிக்கொள்வதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தவிர்க்கவும், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத் தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் நிபுணத்துவமும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
