ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று மஹர சிறைச்சாலையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் பாதாள உலகக் குழு உறுப்பினரகள்; வசம் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த கைது நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது நீதியான செயல் அல்ல என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
