78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளையொட்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முப்படையினரின் ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பல முக்கிய வீதிகளில் காலை 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
நிதாஸ் மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, பௌத்தலோக மாவத்தை, விஜேராம மாவத்தை, மேட்லண்ட் கிரசன்ட் மற்றும் ஹோர்டன் பிளேஸ் உள்ளிட்ட வீதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
78வது சுதந்திர தினக் கொண்டாட்டம் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. ‘இலங்கையை மறுவளர்ச்சி பாதைக்கு’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 2,000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
