செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமஷ்டியா? ஏக்கிய ராஜ்யவா? சந்தித்துப் பேசவும் விரும்பாத இரு ”தலை”களின் பிரச்சனை

e0ae9ae0aeaee0aeb7e0af8de0ae9fe0aebfe0aeafe0aebe e0ae8fe0ae95e0af8de0ae95e0aebfe0aeaf e0aeb0e0aebee0ae9ce0af8de0aeafe0aeb5e0aebe | Pathivu News

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி (கூட்டாட்சி) கொள்கையை பிரகடனம் செய்த இலங்கை தமிழரசுக் கட்சி ஏக்கிய ராஜ்யவுக்குள் (ஒற்றையாட்சி) சிக்கித் தடுமாறுகிறது. ஆரம்பத்தில் சமஷ்டியை ஏற்காதிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நிகழ்காலத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது தமிழ்ப் பேரவைக்கூடாக சமஷ்டியை முன்னிறுத்தி தீர்வை வலியுறுத்துகிறார். இவர்களை பொதுநிலைப்பாட்டில் ஒருமித்துக் கொண்டுவர சுவிஸ் தூதுவர் எடுத்த முயற்சியும் சரிவு கண்டுள்ளது.

தமிழர் தேசிய அரசியல் என்பதும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு என்பதும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை போன்றது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை யார் என்பதை அறிய முடியாதிருக்கும் முட்டு மோதலே இதற்கான அடிப்படை.

அரசியல் தீர்வு குறித்து தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை அண்மிப்பதற்கு சுவிஸ் தூதரகம் எடுத்த முயற்சி பற்றியும், இதற்காக தமிழர் தரப்பினரை ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கெனவும் இந்த மாதம் 19ம் திகதி சுவிஸ் தூதரகம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

நோர்வே எனும் சக்கடத்தார் ஏறிப் பயணம் செய்து சறுக்கி விழுந்த குதிரையில் சுவிஸ் ஏறியுள்ளது. பெருமளவான ஈழத்தமிழருக்கு பிரச்சனையின்றி அடைக்கலம் கொடுத்ததாலும், ஈழத்தமிழ் ஊடகர்கள் அதிகமானோர் அடைக்கலம் பெற்று அங்கு வாழ்வதாலும் சுவிஸின் இந்த முயற்சியை பலரும் நம்பிக்கையோடு விரும்பினர்.

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர் தாயகத்தில் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். தமது முயற்சி தமிழர் தரப்பில் ஒருமித்த இணக்கப்பாட்டை கொண்டு வரும் என்பதில் பூரண நம்பிக்கையில்லாத நிலையிலும் முயற்சித்துப் பார்ப்போமென சுவிஸ் எண்ணியிருக்கலாம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னணியில் சுவிஸ் இருந்ததாக பரவலாகப் பேசப்பட்டது. இதே மாதிரியான பயணத்துக்கு தமிழரசுக் கட்சிக்கும் சுவிஸ் அழைப்பு விடுத்ததாகவும் அதனை அவர்கள் நிராகரித்ததாகவும் நம்பகமான தகவல் உண்டு.

அனைவரையும் ஒன்றாக சந்திப்பதற்கு சுவிஸ் எடுத்த முயற்சி தமிழர் பிரச்சனை தீர்வுக்கானது அல்ல. அதற்குரிய பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கான முன்னெடுப்பு மட்டுமே. இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது எது என்று பார்க்க வேண்டும்.

அண்மைய அனைத்துத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுர குமர ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தார். மைத்திரி – ரணில் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாடு அந்த அரசுடன் தேநிலவைக் கழித்த தமிழரசுக் கட்சியின் முழுமையான பங்களிப்புடன் இடம்பெற்றது. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தொடர விரும்புவதாகக் குறிப்பிட்ட அநுர குமர, நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு விடயத்தில் தீவிரமாகப் பங்காற்றிய சுமந்திரனின் பங்கை தாங்கள் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.

அவ்வேளையில் பல ஊடகங்கள் முன்னைய ஒளிப்படம் ஒன்றை மீள்பிரசுரம் செய்து தங்கள் வாசகர்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தின. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி.யினரின் (அநுர குமரவின் தாய்க்கட்சி) மே தின ஊர்வலத்தில் சுமந்திரன் செஞ்சட்டை அணிந்தவாறு முன்வரிசையில் அநுர குமரவோடு சேர்ந்து சென்ற அந்தக் காட்சியே அந்த ஒளிப்படம். இதனைப் பார்த்தவர்கள் அநுர குமரவுக்கும் சுமந்திரனுக்கும் ஏற்கனவே இருந்த தொடர்பை நினைத்துக் கொண்டார்கள். தங்களின் சட்ட மாஅதிபர் சுமந்திரன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல, அநுர குமரவுக்கும் இவரே சட்ட ஆலோசகர் என பலரையும் எண்ண வைத்தது சம்பந்தப்பட்ட ஒளிப்படம்.

அநுர குமர தேர்தல் காலங்களில் சொன்ன புதிய அரசியலமைப்பு இன்னும் வரவில்லை. சி.வி.கே.சிவஞானம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் கடந்த நவம்பர் 19ம் திகதி அநுர குமரவை சந்தித்துப் பேசியபோது அனைத்து மக்களினதும் பிரச்சனைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு காணப்படுமென மீண்டும் கூறப்பட்டது. மைத்திரி – ரணில் காலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஏக்கிய ராஜ்ய (ஒற்றையாட்சி) முறைமை. ஆனால் தமிழர் தொடர்ந்து கேட்பது சமஷ்டி (கூட்டாட்சி) முறைமை என்பது இப்போது முனைப்புப் பெற்றுள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் ஆரம்ப காலத்தில் சமஷ்டியை ஏற்கவில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலானவர்கள் சமஷ்டியையே தங்கள் கொள்கையாக பிரகடனம் செய்தனர். 1970களில் இரண்டு கட்சிகளின் தலைமை வேட்பாளர்களும் தோல்வி கண்டதால் தமிழர் ஐக்கிய முன்னணி தனிநாட்டுக் கோரிக்கையுடன் உருவாக்கப்பட்டது. 1977 தேர்தலில் இவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையில் நம்பிக்கை வைத்த இளைஞர்கள் இவர்கள் பின்னால் சென்று அதீத ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்தனர். ஆனால் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர்.

தலைவர்களுக்கு தங்கள் இரத்தத்தால் திலகமிட்ட இளைஞர்கள் தங்கள் இரத்தத்தை விடுதலைக்கு விதையாகக் கொடுத்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்தனர். இவர்களே தமிழரசு, தமிழ் காங்கிரஸ், முன்னாள் ஆயுதப் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதையடுத்து தமிழர் ஒற்றுமை என்பது தலைகீழானது.

இதுவே சிங்கள தேசத்துக்கு தமிழர் மீது அடக்குமுறையை வேகப்படுத்தவும், ஆட்சி முறையிலிருந்து அகற்றவும் வாய்ப்பானது. இதனால் ஏற்பட்ட தேக்க நிலை இன்றுவரை தொடர்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தல்கள் வரும்போது பதவி மோகத்தில் இணக்கம் காண்பதும் பின்னர் பிணக்குப்படுவதும் வரலாறாகி விட்டது. அநுர குமர அணியின் தமிழர் பிரதேச தேர்தல்களின் வெற்றி இதற்கு உறுதியான சாட்சி.

சுமந்திரனை வடமாகாண முதலமைச்சர் ஆக்கும் இலக்குடன், கூட்டமைப்பிலிருந்து அகற்றப்பட்டு புதிதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கியவர்களை தமிழரசுக் கட்சியுடன் இணைக்க அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் உருவாகியிருந்த தமிழ் மக்கள் பேரவையில் இணைந்திருந்த ஜனநாயகக் கூட்டணியினர், மாகாண சபையில் சில ஆசனங்களைப் பெறும் ஆசையில் தமிழரசோடு இணைய முனைந்தனர். இவ்வேளையில் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறாது என்பது தெரிய வந்ததால் அந்த இணைப்பு முறிந்துவிட்டது. புளொட் தலைவர் சித்தார்த்தன் வீட்டில் இடம்பெற்ற இரு தரப்பினரதும் சந்திப்பின் பின்னரே இந்த முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. (இன்னொரு வேளையில் இதுபற்றி விபரமாகப் பார்க்கலாம்)

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து எதிர்த்துப் போராடி பல இழப்புகளைச் சந்தித்ததோடு 13ம் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் மறுத்து வந்த ஜே.வி.பி.யினர், ஜனநாயக வழியில் கிடைத்த ஆட்சியைப் பயன்படுத்தி புதிய அரசியலமைப்பில் 13ம் திருத்தத்தையே இல்லாது ஒழிப்பர் என்பது இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஊடக சந்திப்பொன்றில், புதிதாக ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை அது நிறைவேற்ற பத்துப் பதினைந்து வருடங்கள் தேவையென சீனத் தலைவர்கள் தம்மிடம் தெரிவித்தனர் என்பதை நினைவிற் கொண்டால், அடுத்த பொதுத்தேர்தல் எப்போது என்பதும், புதிய அரசியலமைப்பு எவ்வாறானது என்பதும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

இது ஒருபுறம் போக, தமிழர் அரசியல் நிலைப்பாட்டுக்கு மீண்டும் வருவோம். சுவிஸ் தூதுவர் தமிழர் தரப்பினருடன் மேற்கொள்ள இருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தமிழரசுக் கட்சியின் தனிப்போக்குதான் இதற்குக் காரணமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தரப்பினர் கூறுகின்றனர். இதனாற்தான் போலும் தங்களின் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்பாடு செய்திருக்கின்றார். சம~;டியை அனைவரும் ஒன்றாக வலியுறுத்த வேண்டுமென்பதே இக்கூட்டத்தின் அடிப்படை. தமிழரசுக் கட்சிக்கும் இவரால் அழைப்பு விடுக்கப்பட்டது.

‘இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தங்களது ஒத்துழைப்பைக் கோருவதுடன், பெறுமதி மிக்க பங்களிப்பை வழங்கக்கூடிய உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்று விநயமாக இந்த அழைப்பின் வாசகம் அமைந்திருந்தது. பெறுமதி மிக்க பங்களிப்பை தமிழரசாரிடமிருந்து கஜேந்திரகுமார் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். அதுபோலவே அவரது அழைப்புக்கான பதிலும் வந்தது.

கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறாது, பங்கேற்கும் சாத்தியமில்லை என்று கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் பதிலளித்துள்ளார். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒருபோதுமே ஒட்டாது என்பதற்கு இவர்களே நல்ல உதாரணம்.

இனம் அழிந்தாலென்ன, மண் பறிபோனாலென்ன எங்களுக்குள் யார் தலைவர் என்கின்ற போட்டி இருக்கும்வரை, இவர்கள் பார்வை இனப்பிரச்சனை தீர்வுப் பக்கம் காணப்படவில்லை. இவர்களிடம் இப்போது முனைப்புப் பெற்றிருப்பது சம~;டியா, ஏக்கிய ராஜ்யவா என்பதுவே.

அநுர குமர அரசாங்கத்தின் தெரிவு என்ன? எப்போது தெரியவரும்? ஒன்று மட்டும் நிச்சயம். புதிய அரசியலமைப்பு வருமாயின் சமஷ்டி என்ற பெயர் அதில் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை. சிங்கள தேசம் ஒருபோதும் இதற்கு அனுமதிக்கப் போவதில்லை. தமிழ்த் தலைவர்கள் தமிழரின் தேசிய பிரச்சனைத் தீர்வுக்கு எப்போது ஒன்றுபடுவார்கள்?

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp