அம்புலுவாவா கேபிள் கார் திட்டத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த அம்பர் அட்வென்சர்ஸ் நிறுவனம் விலகியமை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெடி தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலுக்குப் பின்னர் சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைத்த முறைப்பாடுகளை அடுத்து, அம்புலுவாவா சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி இன்றி கட்டுமானங்கள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிபுணர் மதிப்பீடு முடியும் வரை அனைத்து கட்டுமான பணிகளும் முழுமையாக இடைநிறுத்தப்பட்டன.
இந்த இடைநிறுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னர், இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டமாக அறிவிக்கப்பட்ட அம்புலுவாவா திட்டத்திலிருந்து அம்பர் அட்வென்சர்ஸ் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக விலகியதாக அறிவித்துள்ளது.
அரசின் ஒழுங்குமுறை தடைகள் மற்றும் தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் இயக்குநர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், அம்புலுவாவா நம்பிக்கை சபை, இந்த திட்டம் நிறுத்தப்பட்டமை நாட்டிற்கு பெரிய இழப்பு என்றும், இதனால் வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுவட்டார மக்களின் வருமான வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
