2025 ஆம் ஆண்டில் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தகவல்களை வெளியிட்டார்.
அவரின் தகவலின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சோதனை மற்றும் நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலான கேள்விகளின் போது, 8.2 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 6,836 பேர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் பொலிஸாரின் முக்கிய கவனம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்ததாகவும், அந்த ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வூட்லர் தெரிவித்தார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் பொலிஸார் 1,821 கிலோகிராம் 174 கிராம் ஹெரோயின், 17,189 கிலோகிராம் கஞ்சா, 3,865 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத் போதைப்பொருள் மற்றும் சுமார் 40 இலட்சம் சட்டவிரோத மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் நாட்டில் குற்றச் செயல்களையும் போதைப்பொருள் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவதற்காக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
